நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது,
ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களின் போக்குவரத்துக்களுக்கான வசதிகளை யாழ்.மாவட்ட செயலாளர் ; நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் மேற்கொள்ப்பட்டுவருகிறது.
நயினாதீவு ஆலய நிர்வாகத்தினர், பிரதேச செயலாளர்கள், கடற்படையினர், பொலிஸார் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையினர், படகு உரிமையாளர்கள், சுகாதார திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடி இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு;ள்ளன.
இதுதொடர்பாக யாழ்.மாவட்ட செயலாளர் ; நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்துள்ளதாவது:
‘எதிர்வரும் 14 ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதி வரை காலை 5 மணியளவில் இருந்து மாலை 7.30 வரை பஸ்கள் யாழ்ப்பாணத்துக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையிலீடுபடும்.
படகுகள் சரியான பராமரிப்புக்குட்படுத்துவதற்கான பரிசீலணைகளை துறைமுக அதிகார சபையினர் மேற்கொள்வார்கள்.
படகுகளில் பயணிக்கும் பயணிகள் கட்டாயமாக உயிர்காப்பு அங்கிகள் அணிய வேண்டும். அதேவேளை, விசேட திருவிழா நாட்களில் அதிகமான பஸ் சேவைகள் மற்றும் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.
எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையால், படகுக் கட்டணத்தை அதிகரிக்குமாறு படகுச் சேவை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விலை நிர்ணய கட்டுப்பாடு சபையுடனான கலந்துரையாடலின் பின்னர் படகுக் கட்டணம் தொடர்பாக அறிவிக்கப்படும்’ என்றார்.