தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் எதிர்க்கட்சியாகச் செயற்பட்ட ஐ.தே.கட்சி, 2002ஆம் ஆண்டில் ரணிலின் தலைமையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. அந்தச் சமயத்தில் நாட்டின் அரச தலைவியாகச் சந்திரிகா செயற்பட்டு வந்தார்.
தமது சிறுவயதிலிருந்தே தமது அரசியல் வளர்ச்சிக்கு சந்திரிகாவால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதால் சந்திரிகா அக்காவின் சுபாவம் குறித்து ரணில் மற்றவர்களைவிட அதிகம் தெரிந்து வைத்திருந்தார். 2002ஆம் ஆண்டில் தாம் அரசை நிறுவி அதிக காலம் செல்லும் முன்னரே, தமக்கு மூளைச் சலவை செய்ய சந்திரிகா திட்டமிடுகிறார் என்பதை ரணில் உணர்ந்து கொண்டார்.
ஆகவே 2015ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்றிய அரசமைப்புக்கான 19ஆவது திருத்தத்தை, 2002ஆம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்றிவிட ரணில் திட்டமிட்டுச் செயற்பட்டார்.
ஆயினும் துரதிஸ்டவசமாக அந்தப் 19ஆவது திருத்தத்தை அந்த வேளையில் நாடாளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ள ரணிலால் இயலாது போய்விட்டது. 2002ஆம் ஆண்டிலேயே அந்தப் 19ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டி ருந்தால் பிரபாகரனும் அவரது சகாக்களும் தற்போது உயிர்வாழ முடிந்திருக்கும். சந்திரிகா தரப்பினரும், மகிந்த தரப்பினரும் அரசியல் அரங்கிலிருந்து காணாமல் போயிருந்திருப்பர்.
அரசியல் எதிர்வு கூறல்கள் எப்போதும் நிஜமாவதில்லை
அது இவ்வாறுதான் அமைய நேர்ந்திருக்கும் . 2002ஆம் ஆண்டில் அரசமைத்து நீண்ட காலம் கழிவதற்கு முன்னர் சந்திரிகாவின் திட்டம் குறித்து ரணில் தௌிவாகப் புரிந்து கொண்டார். ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அரசதலைவருக்குரிய அதிகாரத்தை இல்லாமல் செய்யும் தமது திட்டத்தை முன்னிறுத்தியே ரணில் அரசமைப்புக்கான அந்தப் 19ஆவது திருத்தத்தை 2002ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இந்த இடத்தில் வேறொரு கேள்வியும் எழுகிறது. அரசைக் கலைக்காதுவிட்டால் பிரபாகரனுக்கு எதிரான போரிலிருந்து பிரபாகரனை எவ்வாறு காப்பாற்ற முடிந்திருக்கும்?
அது இவ்வாறுதான் இடம்பெற நேர்ந்திருக்கும். 2002ஆம் ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதையடுத்து ரணில் போரை உடனடியாக நிறுத்தி நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெயிமை இலங்கைக்கு வரவழைத்து சமாதானப் பேச்சுக்களை ஆரம்பித்தார்.
எதிர்மறையாக ஆகிப்போன ரணிலின் திட்டம்
போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த இரண்டு ஆண்டுகள் காலத்தில், நாட்டில் நிலவிய நிலவரம் குறித்து விசேடமாக விபரிக்க வேண்டியதில்லை. விடுதலைப்புலி போராளிகள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொழும்புக்குள் இலேசாக ஊடுருவினர். கொழும்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்க ளுக்குக்கூடப் பாதுகாப்பு இருக்கவில்லை. விடுதலைப்புலிகளது அச்சுறுத்தலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எதிர்நோக்கவேண்டியிருந்தது. தெற்கில் விடுதலைப்புலிகளது தாக்குதல்கள் வெற்றிகரமாக முன்னெ டுக்கப்பட்டன. இராணுவத்தினர் தமது ஆயுதங்களைக் களைந்தபோதிலும், விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களைக் கீழேவைக்கவில்லை. அவர்களது தாக்குதல் நடவடிக்கைகள் மேலும் தொடர்ந்தன என்பது கசப்பான உண்மையே.
நிலைமை ஒருபுறம் இவ்வாறு தீவிரமடைந்து சென்ற வேளையில், அரசைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் ரணிலோ அரசமைப்புக்கான 19ஆவது திருத்தத்தை நாடாளுமன்றில் முன்வைத்தார். அது அந்த வேளையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருப்பின், எதிர்க் கட்சியினர் அரசை எந்த அளவுக்கு விமர்சித்த போதிலும், விடுதலைப்புலிகள் நாடுதழுவிய ரீதியில் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டாலும், நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடினாலும், சுருக்கமாகக் கூறுவதானால், முழுநாட்டு மக்களுக்குமே அரசு வேப்பங்காயாகக் கசந்தாலும், ரணிலின் தலைமையிலான அரசு ஐந்து ஆண்டுகளுக்குப் பதவியிலிருக்க முடிந்தி ருக்கும்.
அவ்விதம் இடம்பெற்றிருப்பின், 2005ஆம் ஆண்டில் நாட்டின் தலைவராகும் வாய்ப்பு மகிந்தவுக்குக் கிட்டியிருந்திருக்காது. அவ்விதம் மகிந்த பதவிக்கு வராதிருப்பினும், பிரபாகரன் உயிரிழந்திருக்க நேர்ந்திருக்காது. பிரபாகரன் உயிரிழக்க நேர்ந்திருக்காவிட்டால் போர் முடிவுக்குவர வாய்ப்பிருந்திருக்காது.
போர் முடிவுக்கு வராதிருந்தால், நாடு தப்பிப்பிழைத்திருக்க முடியாது. அவ்வாறானால், மகனே எமக்கு நாடென்று ஒன்றில்லை (அபட புத்தே, ரட்டக் நத்தே) என்று கூறவேண்டிய நிலை சிங்கள மக்களுக்கு ஏற்பட்டிருக்கும். அந்த வகையில் அநுரகுமார திசநாயக சொல்வது போன்று, 2002ஆம் ஆண்டில் சந்திரிகாவின் கண்களைத் துணியால் கட்டிவிட்டு நாடகமாட ரணில் தீட்டிய திட்டம் தோல்வியில் முடிந்ததாலேயே அரசியல் அபிலாசை காரணமாகவாயினும்கூட, மகிந்தவால் போரை முற்றுமுழுதாக முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.
மைத்திரிபால மீதும் தனது கண்காட்டு வித்தையைப் பிரயோகித்த ரணில்
நீண்ட காலமாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்துவந்த ரணிலால், ஒருவாறு 2015ஆம் ஆண்டில் மீண்டும் அரசமைத்து தலைமை அமைச்சராக முடிந்தது. மைத்திரிபால சிறிசேன அரச தலைவராகப் பதவியேற்றார். அரச தலைவர் ஒரு கட்சிக்காரராகவும், தலைமை அமைச்சர் மற்றொரு கட்சிக்காரராகவும், இருந்து கொண்டு நீண்ட காலத்துக்கு அரசைச் சுமுகமாக நடத்திச் செல்வது சிரமமானதொன்று என்பதை, 2015ஆம் ஆண்டில் ரணிலை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டுவர முன்னின்று செயற்பட்ட சந்திரிகா அக்கா, 2002ஆம் ஆண்டிலேயே ரணிலுக்கு எடுத்துக்கூறியிருந்தார்.
கொள்ளிக்கட்டை சூட்டால் காயப்பட்ட மனிதன், தங்க ஆபரண வௌிச்சத்துக்குக் கூட அஞ்சுவான் என்பது முதுமொழி. அந்தவகையில் ரணில் குறித்து முன்னெச்சரிக்கையுடனேயே சந்திரிகா செயற்பட்டார். சந்திரிகா சிக்குப்படாது தப்பித்துக்கொண்ட ரணிலின் கண்கட்டு வித்தையில் மைத்திரி வசமாகச் சிக்கிக் கொண்டார். சந்திரிகா ஒரு பக்கத்தில் ஒதுங்கியிருந்து நடப்பவற்றைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். மைத்திரிபாலவின் கண்களைக்கட்டி மறைத்துவிட்டு, ரணில் தனது திருவிளையாடலை முன்னெடுத்துச் சென்றார்.
மிக இலகுவாக, சிரமங்கள் எதுவுமின்றி, அரசமைப்புக்கான 19ஆவது திருத்தத்தை ரணில் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டார். இப்போது இன்றைய அரசுமீது அதிருப்தியுற்று நாட்டின் பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராடினாலும் சரி, ஐ.தே.கட்சி தேர்தலுக்கு மேல் தேர்தலில் தோல்விக்கு முகம் கொடுக்க நேர்ந்தாலும் சரி, முழுநாட்டு மக்களுக்கும் இந்த அரசு வேப்பங்காயாகக் கசந்தாலும் சரி, அரசு கலைக்கப்படுவதற்கான வாய்ப்பு முற்றுமுழுதாகக் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது. ஐந்து ஆண்டுகள் காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர், ரணிலின் தலைமையிலான அரசைக் கலைத்துவிட மைத்திரிபாலவால் ஒருபோதுமே இயலப்போவதில்லை என்பதே யதார்த்தமாகும்.
மைத்திரிபாலவுக்கும் ரணிலுக்குமிடையே கடும் கருத்து முரண்பாடென நம்பும் நாட்டு மக்கள்
தற்போது மைத்திரிபாலாவுக்கு, ரணில்மீது கடும் கசப்பும், வெறுப்பும் ஏற்பட்டு விட்டுள்ளதாக நாட்டு மக்கள் பரவலாக நம்புவதாகக் கூறப்படுகிறது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதைக் கூறமுடியாதுள்ளது. ஆனால் கடந்த சில நாள்களாக வௌிவரும் செய்திகளை அவதானிக்கும் போது இதில் உண்மை கிடையாது என்று உறுதியாகக் கூறுவும் இயலாதுள்ளது.
அரசமைப்புக்கான 19ஆவது திருத்தத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றிய கையோடு ரணில்–மலிக் சமரவிக்கிரம தரப்பினர் பொருளாதாரக் குழுவொன்றை உருவாக்கியிருந்தனர். இதன் மூலம் மீண்டும் ஒருதடவை மைத்திரிபாலாவின் கண்கள் இரண்டும் துணியால் இறுக்கிக் கட்டப்பட்டன. பொருளாதாரக்குழு என்ற பெயரில் மலிக் சமரவிக்கிரம தரப்பினர் சாக்கின் வாயை இறுகக் கட்டிக் கொண்டனர். கயிற்றில் கட்டப்பட்டுள்ள மாடு சுற்றிச் சூழல்வது அருகிலுள்ள தென்னம் பிள்ளையைக் கடித்து உண்பதற்கே என்பதை மைத்திரிபால உணரத் தலைப்பட்ட வேளை, காலம் கடந்து போய்விட்டிருந்தது.
இதற்குப் பொருத்தமானதொரு உதாரணமாக சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தைக் குறிப்பிட இயலும். மைத்திரிபால கண்மூடிக் கண்திறப்பதற்குள் ஒப்பந்தப் பத்திரத்தின் பக்கங்கள் புரட்டப்பட்டுவிட்டன.
குறித்த ஒப்பந்தத்தின் பாரதூரத்தன்மை மைத்திரிபாலவுக்கு இப்போதுதான் புரிந்துள்ளது. ஆனால் பெரஹர ஊர்வலம் கடந்து போய் விட்டுள்ள நிலையில், மைத்திரியால் என்னதான் செய்ய இயலும்?
குறித்த ஒப்பந்தத்தால் நாட்டுக்கு நன்மையேதும் இல்லை என்பது மைத்திரிக்கும் புரியாமல் இருந்திருக்கக்கூடும். எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்யாத சிங்கப்பூர் நாட்டுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தக் கொள்கை மேற்கொண்டதன் மூலம், இலங்கை ஈட்டிக் கொண்ட பயன் எதுவுமில்லை. அதேவேளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யத்தக்க பொருள்கள் எதுவும் எம்மிடம் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கதொன்று. பொருள்கள் மீள் ஏற்றுமதியின்போது, சிங்கப்பூர் எமக்கு வாய்ப்பு ஏற்படத்தக்க விதத்தில் செயற்படப்போவதுமில்லை.
மத்தியவங்கி பிணைமுறி ஊழல்மூலம் சகலருக்கும் தண்ணி காட்டிய அர்ஜூன் மகேந்திரன்
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்து திட்டம் தீட்டிய முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் மகேந்திரன், ஊழல் மோசடி பகிரங்கமானதையடுத்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார். பன்னாட்டுப் பொலிஸ் தரப்பினரால் தேடப்பட்ட வேளையில் மகேந்திரன் சிங்கப்பூரில் ஔிந்து கொண்டார். மலிக் சமரவிக்கிரம தரப்பினரது சிங்கப்பூர் ஒப்பந்தம் மகேந்திரனால் திட்டமிடப்பட்டதொன்று.
மகேந்திரன் சிங்கப்பூரில் ஔிந்திருந்து கொண்டு குறித்த சிங்கப்பூர் ஒப்பந்தம் குறித்துத் திட்டம் தீட்டியிருந்தார். ரணில் தரப்பினருக்கும் மலிக் சமரவிக்கிரம தரப்பினருக்கும் வெட்கம் என்பது கொஞ்சம் கூடக் கிடையாது என்றே கூறவேண்டியுள்ளது. கழுத்தில் பிடித்து இலங்கைக்கு இழுத்து வந்து, சிறைக்கூண்டில் அடைக்கப்பட வேண்டிய திருட்டுப் பேர்வழியான மகேந்திரன், இன்று ரணில்– மலிக் சமரவிக்கிரம தரப்பினருக்கு திட்டம் வகுத்து உதவும் ஆலோசகராக ஆகியுள்ளார்.
மலிக் தரப்பினரது பொருளாதாரக் குழு முற்று முழுக்க ஏமாற்று வேலை என்பது மைத்திரிபாலவுக்குத் தெரிய வந்தபோது காலம் கடந்து போய்விட்டிருந்தது. அமைச்சரவைக் கூட்டத்தின்போது, ரணில்–மலிக் சமரவிக்கிரம தரப்பினர்களை பொருளாதாரக் குழு குறித்து விமர்சித்து ஏசிவிட்டு, கடும் கோபத்துடன் மைத்திரிபால கூட்டத்தை விட்டு வௌியேறிச் சென்றபோது, தமது தரப்புத் தவறைப் பூசி மெழுகி எப்படியாவது மைத்திரிபாலவைச் சமாதானப்படுத்துவதற்காக ரணில்–மலிக் சமரவிக்கிரம தரப்பினர்கள் மைத்திரிபாலவைப் பின் தொடர்ந்து சென்றதாகக் கூறப்பட்டது. ஆனால், அதையும் கூட மறைத்து, ஒருவாறு இட்டுக்கட்டிச் சமாளிக்கும் விதத்தில், ராஜித சேனரத்ன ரணில்–மலிக் சமரவிக்கிரம ஆகியோர் மைத்திரிபாலவின் பின்னால் சென்றமை கழிவறைக்குச் செல்லும் நோக்கிலாகுமெனக் கூறிச் சமாளிக்க முயன்றார்.
2002ஆம் ஆண்டில் ரணிலின் பொறியில் இருந்து நாடு அதிஷ்டவசமாகத் தப்பிப் பிழைத்தது. ஆனால் 2015ஆம் ஆண்டில் அவ்வாறு இடம்பெறவில்லை. ரணில் வைத்த பொறியில் நாடு மாட்டிக் கொண்டுவிட்டது. அது துரதிஷ்டமானதொன்றே. ரணிலின் பாஷையில் கூறுவதாயின், இன்று நாட்டு மக்கள் தமது வயிற்றை இறுகக்கட்டிக் கொள்ள வேண்டி நேர்ந்துள்ளது. எதிர்வரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு நாட்டு மக்கள் அத்தகைய விதத்திலேயே வாழ்க்கையை ஓட்டியாக வேண்டியுள்ளது. எதிர்வரும் இந்த ஒன்றரை வருடங்களாவது மைத்திரிபால கண்களைத் திறந்து கொண்டு அவதானத்துடன் செயற்பட்டால், நாட்டு மக்களுக்கு நன்மை விளையாது விட்டாலும், மைத்திரிபாலவினது நலனாவது சிறப்பாய் அமையும்.