இந்திய கால்பந்து அணியின் தலைவர் சுனில் சேத்ரி, மைதானத்திற்கு வந்து எங்களது ஆட்டத்தை தயவு செய்து பாருங்கள் என ரசிகர்களுக்கு வைத்த உருக்கமான கோரிக்கைக்கு, விராட் கோஹ்லி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கிரிக்கெட்டின் ஆதிக்கத்தினால் ஏனைய விளையாட்டுகளில் ரசிகர்கள் போதைய ஆர்வம் காட்டுவதில்லை. கால்பந்து விளையாட்டினை ரசிப்பவர்களும் ஐரோப்பிய கிளப் அணிகளின் போட்டிகளை காணவே விரும்புகின்றனர்.
ஆனால், இந்திய கால்பந்து அணி பிபா தரவரிசையில் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. அதாவது, 130வது இடத்தில் இருந்த இந்திய அணி, தற்போது 97வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அணித்தலைவர் சுனில் சேத்ரி தான்.
தற்போது நான்கு நாடுகள் மோதும் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில், இந்திய அணி 5-0 என்ற கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
இது அவரது 3வது ஹாட்ரிக் கோலாகும். ஆனால், இந்தப் போட்டியை காண வந்த ரசிகர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் குறைவு. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த சுனில் சேத்ரி, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‘ஐரோப்பிய கால்பந்து கிளப் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எதிர்பார்க்கும் தரமில்லாததை பார்த்து உங்களது நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டீர்கள். ஒத்துக்கொள்கிறேன். இங்கு ஐரோப்பிய தரம் இல்லை.
ஆனால், நாங்கள் உங்களது நேரத்தை பயனுள்ளதாக்கும் விதமாக எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம். இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன்.
மைதானத்திற்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்சாகப்படுத்துங்கள். இந்திய கால்பந்து அணிக்கு நீங்கள் தேவை’ என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.