தமிழ் இளைஞர்கள் பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் இதுவரை நீக்கப்படவில்லை என தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கான பல முயற்சிகளை அப்பாத்துரை விநாயகமூர்த்தி முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்காகவும் அவர் உச்சநீதமன்றில் வழக்குகளை தொடுத்திருந்தார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவுவேந்தல் நேற்று சனிக்கிழமை (02.05.2018) மாலை தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலை இயக்க செயலாளர் நாயகம் ந.சிறீகாந்தா, வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு நினைவஞ்சலி செலுத்தியதுடன், நினைவுரைகளையும் ஆற்றியிருந்தனர்.
இதில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட இலங்கை தமிழரச கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஏற்றதாக குறிப்பிட்டுள்ளார்.