நாளை ( 05) அனுஷ்டிக்கப்படவுள்ள உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
‘முறையற்ற பிளாஸ்டிக் பாவனையினால் ஏற்படும் சுற்றாடல் தாக்கங்களை தடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை சுற்றாடல் தின நிகழ்வு கேகாலையில் இடம்பெறவுள்ளது.
கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 05ஆம் திகதியான காலப்பகுதி தேசிய சுற்றாடல் வாரமாக அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வு ஜனாதிபதியினால் மரக் கன்றொன்று நடப்பட்டு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
பிரதேசத்தின் கழிவு முகாமைத்துவத்திற்கான வசதிகளை வழங்குதல், கேகாலை மாவட்டத்திற்கான சுற்றாடல் நிலைமைகள் பற்றிய அறிக்கையை வெளியிடுதல், சுற்றாடல் தினத்துடன் இணைந்ததாக இடம்பெறவுள்ள போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசில்களை வழங்குதல் ஆகிய பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் இதன்போது இடம்பெறவுள்ளன.
மேலும் சர்வதேச சுற்றாடல் தினத்துடன் இணைந்ததாக கேகாலை மாவட்டத்திலும் நாடளாவிய ரீதியிலும் பல்வேறு சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றாடல் துறை அமைச்சும், அதன் இணை நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன.
சர்வதேச சுற்றாடல் தினம் 1972ஆம் ஆண்டு சுவீடனினால் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து வருடா வருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. சுற்றாடல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் சுற்றாடல் அழிவுகளை தவிர்த்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அதிகரிப்பது இத்தினம் அனுஷ்டிக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.
இயற்கை அனர்த்தங்களான வெள்ளம், மண்சரிவு, எரிமலை போன்ற அனர்த்தங்கள் உலகளாவிய ரீதியில் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றன. அத்துடன் பூகோள வெப்பமயமாதல் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று சர்வதேச சுற்றாடல் துறை நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
வளி மற்றும் நீர் மாசடைதல் காரணமாகவும் மக்கள் வாழ்கின்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பற்ற விதத்தில் மாசடைந்து காணப்படுவதும் அன்றாட மனித நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அனர்த்தங்களுக்கு முக்கிய காரணம் மனித நடவடிக்கையேயாகும் என சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.